Tuesday, December 14, 2010

கம்ப்யூட்டர் விண்டோவைப் பார்த்துப்பார்த்து கண்ணும் பூத்துப்போச்சு...கழுத்துவலி முதுகுவலின்னு கஷ்டமும் கூடிப்போச்சு. ஆனா, என்னதான் வருத்தம்வந்தாலும், தன்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து நாலுபேர் பின்னூட்டமிடும்போது, தன்னோட எல்லாவலியும் தீர்ந்துப்போனதுபோல் உணர்வதாகத்தான் சொல்கிறார்கள் அநேகப் பதிவர்கள்.

ஆனா, இப்படி மண்டையைக் குடைந்து மூளையைக் கசக்கி,உணர்வுகளை உருக்கி எழுதப்படுகிற விஷயங்களை உறுத்தலின்றிக் களவாடிப் பேர்வாங்க நினைக்கிறாங்க கள்வர்கள் சிலர். சட்டுன்னு காப்பியெடுத்து பட்டுன்னு பேஸ்ட்பண்ணி பெருமையடையணும்னு அவ்வளவு ஆசை.

எனக்குத்தெரிந்து, முதலில்,சமையல் அட்டகாசங்கள் ஜலீலாவின் பதிவுகள் பிரபல பத்திரிகையொன்றில் அப்படியே திருடி வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தாங்க.அது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இன்றைக்கு பதிவுலகில் பாபு என்பவருடைய பதிவைத்திருடி இன்னொரு பிரபல பத்திரிகை வெளியிட்டிருக்கிறதாகப் படிக்கநேர்ந்தது.

சொந்தப்படைப்புகளின்றி, அடுத்தவர்களின் படைப்புகளை இதுமாதிரி எடுத்து வெளியிடும்போது இது இன்னாருடைய படைப்பு என்ற சின்ன ஒரு குறிப்போட வெளியிடலாமே... இதனால் எழுதியவருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

ஊரான்வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அலுங்காம அடுத்தவன்பொருளை அபகரிப்பதைக்குறிக்கவே இப்படிச்சொல்லுவாங்க. ஜலீலாவோட சமையல் குறிப்பைத் திருடி, தன்னோட சமையல் வலைப்பக்கத்தில் வெளியிருட்டிருந்த ஒருத்தர், தன் தளத்தில் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார், தான் தூத்துக்குடி மண்ணின் மைந்தன் என்று. அவர், பிறந்த மண்ணுக்குப் பெருமைசேர்க்கிற லட்சணம் அப்படி.

போன வாரத்தில் பதிவுலக சகோதரரொருவரின் கவிதைகள் அப்படியே களவாடப்பட்டு வெளியிட்டிருப்பதாகப் படித்துவிட்டு, அந்தத் தளத்துக்குப்போனால், அந்தம்மா அதைவிட அதிபுத்திசாலியாகி, திருட்டு வெளியானதும், தன்னோட வலைப்பக்கத்தை அழைக்கப்பட்டவங்கமட்டும் பார்க்கிறமாதிரி மாற்று ஏற்பாடுசெய்திருந்தாங்க. இன்னார் பெரிய எழுத்தாளர் என்று தன்னோட ஜால்ராக்களை நம்பவைக்க மக்கள் எப்படியெல்லாம் மெனக்கெடுறாங்கபாருங்க.